சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
38வயதான நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் 9ந்தேதிதான் இயக்குனர் விக்னேஷ்வரனை திருமணம் செய்தார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், திருமணம் முடிந்த 4 மாதத்தில் குழந்தையா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் வாடகை தாய் சட்டப்படி, திருமணம் முடிந்த 5ஆண்டுகளுக்கு மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்று கூறப்பட்டது. இதனால் நயன் விக்கியின் குழந்தை சட்டவிரோதமான என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நயன் விவகாரத்தில் சர்ச்சைகளும், அவர் தொடர்பான அவதூறுகளும் பரவின.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், செய்தியாளர்கள் நயன் குழந்தை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை வந்த பின் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தொடர்ந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 300-க்கும் மேல் இருந்தது. தற்போது 30க்கும் கீழ் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றார்.