திருச்சி

திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகம்  உருவாக்கப்பட உள்ளது.  இதில் பெரியார் குறித்த ஒலி ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம் குழந்தைகளுக்கான விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இங்கு 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட உள்ளதாகத் திராவிடர் கழகம் அறிவித்தது.  இந்த சிலையின் பீடம் 40 அடி உயரமும் பெரியார் சிலை 95 அடி உயரத்திலும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்காகப் போராடியதை நினைவு கோரும் வகையாக இந்த சிலையின் உயரம் 95 அடியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு இந்தச் சிலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.  கடந்த சில வருடங்களாக இந்த சிலைக்கான ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது.  இதற்காகப் பல துறைகளில் இருந்தும் ஆட்சேபம் இல்லை எனச் சான்றிதழ் பெற்ற பிறகும் அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.