சென்னை
கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றைக் கவனிக்கத் தமிழக அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ படுக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சீர் செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இன்று அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
“தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனில் பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்றைக் குறைக்கும் பொருட்டு மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.
பொதுச் சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்தில் இயங்கி வரும் கோவிட் கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பெருந்தொற்று தடுப்புப் பணியில் நான்கு இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அலுவலர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- செல்வி அனாமிகா ரமேஷ் பிராணவாயு தேவை கவனிப்பு
- திரு கௌரவ் குமார் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு கவனிப்பு
- செல்வி ஆர் ஐஸ்வர்யா மருத்துவமனை, படுக்கை வசதி கவனிப்பு
- திரு கட்டா ரவி தேஜா மருத்துவமனை, படுக்கை வசதி கவனிப்பு”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.