சென்னை
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கை பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது., அதன் பிறகு சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் படி தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாகப் பேருந்து போக்குவரத்து மீண்டும் விரிவாக்கப்பட்டது.
தற்போது மாநிலம் முழுவதும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 60% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதாவது 43 இருக்கைகள் கொண்ட பேருந்தில் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதே வேளையில் நகர பேருந்துகளில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இய|ங்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளைப் பயன்படுத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அரசுப் போக்குவரத்து கழகங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.