டெல்லி:  அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடிய வழக்கு மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணிய சாமி  தொடர்ந்த வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கடைசியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் தமிழக அரசு அர்ச்சகராக நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம்,  தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பாக ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வேறு வழக்குகளில் ஆஜராகி இருப்பதால், வழக்கை மற்றொரு நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்று, வழக்கை  6 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.