சென்னை
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
அமலாக்கத்துறையினரால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்தார். தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார்.
நேற்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் மீது ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறினார்.
திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து ஆளுநரின் இந்த உத்தரவுக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆளுநருக்கு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போது ஆளுநரின் முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆளுநர் ரவி, அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதால், அதுவரை, செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. ஆளுநர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பார் என முதல்வருக்கு மற்றொரு கடிதம் வாயிலாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.