சென்னை
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நியமனத்துக்கு தேர்வுக் குழுவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைவரை நியமித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பதவியில் உள்ள சூரப்பா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின் போது சூரப்பா ஒவ்வொருவரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்ததாக குற்றச்சாட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதையொட்டி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு உயர்கல்வித்துறை செயலரால் அமைக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் இடையே சூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை ஊழல் புகார் காரணமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்யத் தேடல் குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைத்துள்ளார். அந்த குழுவுக்குத் தலைவராக டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணை வேந்தர் ஜகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் வெளியாகி உள்ளது.