சென்னை
சிவில் சர்வீசச் தேர்வில் வெற்றி பெற்றோருக்குத் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், மாநில அளவில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தமிழகத்தின் அனைத்து இளம் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வில் வென்ற அனைத்து பெண் சாதனையாளர்களுக்கும் சிறப்புப் பாராட்டுகள். மக்கள் சேவையில் அனைவருக்கும் நிறைவான மற்றும் திருப்திகரமான பணி அமைய வாழ்த்துகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும். கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயரும் வகையில், தமிழக அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு, மாநிலத்துக்குப் பெருமை சேர்ப்பீர்.