சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் 13ம் தேதி நடந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு 2ம் கட்டமாக தேர்வு நடைபெற்றது. இந் நிலையில், நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வில் 56.44 சதவீத பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். கடந்தாண்டு நீட் தேர்ச்சி விகிதமானது 48.57% ஆக இருந்தது. தற்போது 57.44% ஆக அதிகரித்துள்ளது.
இந் நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர் ஒருவர், நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டியை சேர்ந்த ஜீவித் குமார் என்பவர் அந்த மாணவராவார்.
இவரது தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார். நீட் தேர்வு எழுதிய ஜீவித்குமார், தமிழகளவில் முதலிடமும், இந்திய அளவில் 10ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.