சென்னை: தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்துடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், மாநிலத்தின் அனைத்து 32 மாவட்டங்களுக்குமான வாடகை நீதிமன்றங்களை அறிவித்துள்ளது.
உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போருக்கு இடையே ஏற்படும் கொடுக்கல் – வாங்கல் சார்ந்த பிரச்சினைகள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்.
2017ம் ஆண்டு நிலவுரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போரின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 32வது பிரிவின்படி, அரசால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 2017ம் ஆண்டு சட்டம், வாடகை தொடர்பாக எழும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்கிறது.
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் சார்பில் வெளியிடப்பட்ட ஆணையின்படி, சென்னை மாவட்டத்திற்கு மட்டும் மொத்தம் 7 வாடகை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதர 31 மாவட்டங்களில் இதுநாள் வரை, முதன்மை மாவட்ட முன்சிஃப் நீதிமன்றங்கள், கூடுதல் மாவட்ட முன்சிஃப் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட முன்சிஃப் நீதிமன்றங்கள் போன்றவை வாடகை நீதிமன்றங்களாக செயல்பட்டன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தனியான அறிவிப்பின் மூலம், வாடகை அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே நியமனம் செய்திருந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பல்வேறு நிலைகளில் வாடகை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடகை சார்ந்த வழக்குகள், இந்த அதிகாரிகளின் முன்னிலையில் தீர்வுகாணப்பட முயல வேண்டும்.
அப்படி சாத்தியமாகாத பட்சத்தில், அந்த வழக்குகள் வாடகை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.