டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள தமிழகஅரசு சார்பில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ந்தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதையொட்டி தொடக்கவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, அவர் டெல்லி செல்ல முடியாத நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்பாலு, கனிமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு, தமிழக அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தனர்.
தமிழக அரசின் சார்பில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, கனிமொழி எம்.பி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் சென்னையில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் “தம்பி” சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.