சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 382 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் தரப்படுகின்றன. ஆனால் அந்த தொகை உள்ளிட்ட விவரங்களை அரசு குறிப்பிடப்படவில்லை என்று கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விசாரணையின் போது, அந்த விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜூன் 25ம் தேதி வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.382 கோடியே 89 லட்சம் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் குறைவான பணியாளர்கள் வருவதால் இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இது தொடர்பான விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதை ஏற்ற நீதிபதிகள், கொரோனா நிதி வழங்கியவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அதற்கான இணையதளத்தில் 8 வாரத்திற்குள் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.