சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபுணத்துவம் உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த இடைக்கால தடை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று வரை நடைபெற்ற விசாரணைகளின்போது, கிரிஜா வைத்தியநாதன் அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று விமர்சித்து வந்த நீதிமன்றம், இன்று அவருக்கு தகுதி இருக்கிறது என கூறி, அவர் நியமனத்துக்கு எதிராக தொடர்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதனை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமனம் செய்தது.
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 9ந்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர் தெரிவித்ததைப் போல சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், கிரிஜா நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை 16ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
அதன்படி வழக்கு நேற்று (16ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக சில ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்தன. அந்த ஆவணங்களை பார்த்த நீதிபதிகள், தீர்ப்பாயங்களில் நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அவரது நியமனம் கேள்விக்குறியானது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றை விசாரயையைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த இடைக்கால தடை நீக்கியும், அவரது நியமனத்தை எதிர்த்த வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக வரும் 19ம் தேதி பதவியேற்க உள்ளார்.
பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை….
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு