விஜயவாடா
முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அந்திர நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் தலைமை செயலாளராக பதவியில் இருந்தவர் ராம் மோகன் ராவ். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்த போது அவருடன் ராம் மோகன் ராவுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. அதை ஒட்டி ராம் மோகன் ராவுடைய இல்லம், அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களுலும் வருமான வரி சோதனை நடந்தது.
அந்த சோதனையில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புதிய நோட்டுக் கட்டுக்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல் கள் வந்தன். ஆயினும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தமிழக வரலாற்றில் முதல் முறையாக தலைமை செயலாளரிடம் வருமான வரி சோனதை நடந்ததால் அவரை பதவியிலிருந்து நீக்க பலரும் கோரினார்கள். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதன் பிறகு கிரிஜா வைத்யநாதன் தலைமை செயலாளராக பதவி ஏற்றார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடத்தும் ஜனசேனா கட்சியின் விஜயவாடா அலுவலகத்துக்கு நேற்று வந்த ராம்மோகன் ராவ் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவரை ஏற்றுக் கொண்ட பவன் கல்யாண் அவருக்கு அக்கட்சியின் சட்ட ஆலோசகர் பதவியை அளித்துள்ளார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பவன் கல்யாண், “ராம் மோகன் ராவ் தமிழக மாநிலத்தில் தனது அனுபவத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இவர் பல இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக அரசை வழிநடத்திச் சென்றுள்ளார். இவர் தற்போது எனது வேண்டுகோளுக்கு இணங்க என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அரசியல் ஆலோசகராக இருக்க ஒப்புக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.