சென்னை:  பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதித்த பின்பும்,  தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து பாஜக 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அரசியல் யாத்திரையை தொடர்ந்ததாக, இது தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி  சென்னை உயர்நீதிமன்றத்தில்  பதில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக சென்று டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என அறிவிக்கப்படடது. இந்த யாத்திரைக்கு தமிழகஅரசு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி யாத்திரை நடைபெறும் என அறிவித்த பாஜக, யாத்திரையை தொடர்ந்தது. இதனால், பல இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,  பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று  தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதைததொடர்ந்து வழக்கில் வாதாடிய தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன்,   தமிழகத்தில் பாஜக மேற்கொண்டிருப்பது வேல் யாத்திரையே இல்லை, அரசியல் யாத்திரை  என்றும்,  விதிகளை மீறியதாக வேல் யாத்திரைக்கு வந்த பாஜகவினர் 2000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வேல் யாத்திரையின் போது பாஜகவினர் முகக்கவசம் அணிவது இல்லை,  தனி மனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியிருப்பதுடன்,  வேல் யாத்திரையால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியதாகவும்,  10 வாகனங்களில் 30 பேர் செல்வதாக பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும்,  காவல்துறையினர் வாகனங்களின் எண்ணிக்கையை நிறுத்துவது கடினம் என்று தெரிவித்ததுடன்,பல இடங்களி பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள்,  காவல்துறை ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டு, அவர்கள் கடமையாற்றுவதைத் தடுத்தனர்.

இந்த யாத்திரையின்போது, கிட்டத்தட்ட 2000 கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்த யாத்திரையின்போது, கார்கள் 10 கி.மீ வேகத்தில் சென்றன,  அதில் ஒரு காரில் இருந்து  பாஜக மாநில தலைவர் முருகன் கையை அசைத்துக்கொண்டிருந்தார், இது கோவிலுக்கான யாத்திரை இல்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பாஜக மத்தியில் ஆளும் கட்சி என்ற தைரியத்தில் வேல்யாத்திரையை தடையை மீறி நடத்த முயற்சிப்பதாகவும், இந்த நாட்டை நிர்வகிக்கும் ஒரு கட்சி சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்கிறது ஆனால், அவர்களால் சட்டத்தை மீற முடியாது என்று  என்றும் தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகளையும் தாக்கல் செய்தார்.