தஞ்சாவூர்:  தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விவசாயிகளின் நெல்மூட்டைகள் வைத்திருக்கும் பகுதிகளில் முறையான வசதிகள் ஏற்படுத்தராமல் இருக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பல ஆயிரம் டன் நெல்மூட்டைகள் மழைகள் நனைந்து விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,538 டன் அரிசி அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில்,   நேற்று (ஆகஸ்டு 21)  காலை சட்டப் பேரவை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வுக் குழு  தலைவர் நந்தகுமார் தலைமையில் எம்எல்ஏக்கள்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,   அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை பார்வையிட்ட அவர்கள், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 1,538 டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மூட்டைகளில் இருந்த அரிசியை ஆய்வு செய்த அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மூட்டைகளில் இருந்த அரிசி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடமும் அவர்கள் கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து,  அரிசி வீணாக காரணமான  அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை செய்துள்ளதாகவும், அரிசியை உரிய காலத்தில் விநியோகம் செய்யாமல், அதன் தரம் குறைவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,  அந்த  அரிசியை கால்நடை தீவனமாக மாற்றவும், அறிவுறுத்தி உள்ளதாக குழு தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது குழு உறுப்பினர்கள் நாகை மாலி, துரை. சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வம் உள்பட பலர் இருந்தனர்.