சென்னை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக பழி வாங்குவதாகக் கூறி தமிழகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்துள்ளனர்.

கடந்த 2019 தேர்தலின்  போது கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையொட்டி ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்குத் தடை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

ராகுல் காந்தியை பாஜக அரசு பழிவாங்குவதாகக் குற்றம்சாட்டியும், பாஜகவைக் கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் கூடினர். பின்னர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் 100-க்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.