சென்னை:
பேராசிரியர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திக தலைவர் வீரமணி உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ் ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவிததுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன்(97) உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது.
சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் அஞ்சலி செலுத்தினர். துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அன்பழகன் உடலுக்கு மீண்டும் அஞ்சலி செலுத்தினர்.
பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்து உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.
கே.எஸ்.அழகிரி
அன்பழகன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அவரைப் போன்ற ஒரு தலைவரை நம்முடைய காலத்தில் பெற்றது அரிதினும் அரிதாகும். அவருடைய மறைவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அதனுடைய தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
பேராசிரியர் அவர்களை பொதுச்செயலாளராக மட்டுமல்ல, தன்னுடைய சொந்த பெரியப்பாவாக கருதியவர், ஸ்டாலின். அந்த அளவிற்கு குடும்ப உறவு அவர்களிடையே இருந்தது. எனவே திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேராசிரியர் என்னுடைய சொந்த மாவட்டத்திற்கு எப்போது வந்தாலும், என்னுடைய தந்தையார் சம்பந்தம் அவர்களை தவறாமல் விசாரிக்க கூடியவர். அவருடைய இளமைகால நண்பர்களை ஒருபோதும் மறவாதவர். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கூட, நண்பர்களுடைய பெயரை குறிப்பிட்டு. அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவருடைய குடும்பத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.
ன்றைக்கு அவரை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் இழந்திருக்கவில்லை. 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் கூறும் நல்லுலகம் இழந்திருக்கிறது. எங்களைப்போன்ற தோழமைக் கட்சிகளும், அவர் மீது அளப்பரிய பற்று உடையவர்களும், அவரை இழந்து வாடும் தமிழ் சமூகத்திற்கும், அவரை இழந்து துயரத்தில் வாடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதனுடைய கோடான கோடி தொண்டர்களுக்கும், அதனுடைய தலைமைக்கும், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.
வைகோ
திமுகவைப் பாதுகாத்த பண்புடைச் செம்மல் க.அன்பழகன் என, அவரது மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“நடேசனார், தியாகராயர், டி.ம்.நாயர் அமைத்த திராவிடஇயக்கத்தின் கருவறையை, எஃகுக் கோட்டையாக ஆக்கிய அறிவாசான் பெரியார், அண்ணா வழியில், எட்டுத் திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த கருணாநிதிக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.
சின்னஞ்சிறு பருவத்திலேயே, திராவிட இயக்க உணர்வு ஊட்டப் பெற்று, பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் கூர்தீட்டப் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராய் இருந்தபோதே, ஒருசாலை மாணாக்கராகிய நெடுஞ்செழியனுடன் இணைந்து மேடைகளில் பேசிய காலங்களில், திருவாரூரில் தமிழ்நாடு மாணவர் மன்றம் நடத்திய கருணாநிதியின் அழைப்பை ஏற்று, பொதுக்கூட்டத்தில் முழங்கிய பெருமைக்குரியவர் க.அன்பழகன்.
அவரது கூர்த்த மதியை, நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவுத்தேடலை அறிந்து உணர்ந்த அண்ணாவால், பெரிதும் மதிக்கப்பட்டவர். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர். திராவிட இயக்கப் பல்கலைக்கழகத்திற்கும் அவரே பேராசிரியர்.
சொற்பெழிவு ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அண்ணா மலேசிய சுற்றுப்பயணம் முடிந்து திரும்புகையில், அவரை வரவேற்று சென்னைக் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில், பேராசிரியரின் பேச்சே விஞ்சி நின்றது. நெருக்கடி நிலைகாலத்தில், 1975 டிசம்பரில், கோவையில் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில், அம்மாநாட்டுத் தலைவராக கருணாநிதியை, தமிழரின் தூங்காத இதயமே வருக; தலைமை தாங்கிட வருக என்று அழைத்து அவர் ஆற்றிய உரை, அம்மாநாட்டின் முத்தாய்ப்பான உரை ஆகும்.
எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பின்னர், சென்னை கடற்கரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், க.அன்பழகனின் உரையே சிறப்பாக அமைந்தது.
தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்று, உய்த்து உணர்ந்த பேராசிரியர் நிகழ்த்திய இலக்கிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும், மேடைகளில் வீசிய மெல்லிய பூந்தென்றல் ஆகும்.
அண்ணா சென்னை வரும்போதெல்லாம், வெள்ளாளத் தெருவில் வசித்து வந்த, க.அன்பழகனின் இல்லத்தில்தான் நாள்கணக்கில் தங்கி, மணிக்கணக்காகப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வாராம்.
கடந்த பிறந்தநாள் அன்று அவரது இல்லம் சென்றபோது, அருகில் அமரவைத்து, அன்பு நெகிழ அவர் பேசியபோது, என் கண்கள் குளமாயின.
திராவிட இயக்கத்தின் வீரமும், தியாகமும், தன்னலம் அற்ற தொண்டும் நிறைந்த புகழ் வரலாற்றில், எந்நாளும் அழிக்க முடியாத தலைவர்களுள் முன்வரிசையில் இடம்பெற்ற க.அன்பழகன், திமுகவின் இன்றைய தலைவர் மு.க. ஸ்டாலினை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, தன் உயிரினும் மேலான திமுகவைப் பாதுகாத்த, பண்புடைச் செம்மல், 100 வயதைக் கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த க.அன்பழகனின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக, இன்றுமுதல் அடுத்த மூன்று நாள்கள், மதிமுக கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்”.
வீரமணி
திமுக தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
நமது இனமானப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் இருந்தவரும், எவரைச் சந்தித்தாலும் கைகுலுக்கி தமது அன்பினையும், பண்பினையும் வெளிப்படுத்தி, எந்த மேடையிலும் தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை, ஒரு மருத்துவர் நோயாளிக்குத் தருவதைப் போல் தவறாது தருபவரும், அறிஞர் அண்ணாவின் உள்ளம் கவர்ந்த தம்பிகளில் முதன்மையரும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்டுப்பாடு காத்தவருமான, கொள்கை மாவீரர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்! அவர் 98 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றாலும் எப்படி அவரது பிரிவை தாங்கி கொள்வது என்று; அவரை இழந்து தவிக்கும் அளவுக்கு நமது இலட்சியப் பயணத்தின் ஒளி கூட்டிய இனமானச்சுடர் அவர்.
அவரது பொதுவாழ்க்கை 85 ஆண்டு காலம் என்ற வரலாற்றுச் சாதனை இந்தியப் பொதுவாழ்வுக்கே ஒரு தனித்தன்மையான எடுத்துக்காட்டு. தி.மு.க.வில் கலைஞர் மறைந்தவுடன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த பண்பின் இமயம் அவர் – எடுத்துக்காட்டுக்கு எப்போதும் இவரே என்ற தனித் தகுதி படைத்தவர்.
அந்த கொள்கை மாவீரரின் மறைவுக்குத் தாய்க்கழகம் தனது வேதனை மிகுந்த துயரத்தை தெரிவிப்பதுடன், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றன.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கைக் குடும்பத்துத் தலைவர் தளபதி உட்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, இலட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தை தொடருவோமாக!
பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்.
டிடிவி தினகரன்:
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி களில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்:
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,‘தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கொள்கை, எண்ணம், லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் அழிவதில்லை, பேராசிரியர் க.அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார் என்று கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தேமுதிக
தேமுதிக சார்பில் அதன் தலைவர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பன்முகத் திறமை வாய்ந்த அன்பழகன் மறைவுக்கு வருந்துவதாகவும், அவரது ஆன்மா சாந்தியடை பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார்.