தேனி

தேனியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று தேனி லட்சுமி புரம் பகுதியில், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி உள்ளார்.

அவர் தனது உரையில்,

”இந்தியா கூட்டணி மக்களுக்குச் சாதனைகளைச் செய்யக்கூடியது ஆகும்.  எங்கள் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான, தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைக்கப்படும். விவசாயிகள் பெற்ற கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெற்கின் குரல் எதிரொலிக்கிறது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், விவசாயப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. 

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது; நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்து விடும். வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார். 

திராவிட மாதிரியால் தமிழகம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்க முடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி. 

10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார். சென்னையில் ரோடு ஷோ காட்டிய மோடி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்கிறார். சென்னையில் மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு அனுமதி தராதது மத்திய அரசுதான். மதுரையின் எய்ம்ஸ் போல மெட்ரோ ரயில் திட்டம் நிற்கக்கூடாது என மாநில நிதியிலிருந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

நான் பிரதமர் கனவில் இருப்பதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி என்ன கனவில் உள்ளார்? பிரதமர்களை உருவாக்கும் இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.”

என்று தெரிவித்துள்ளார்.