சென்னை

ரிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது எனப் பல சுற்றுச்சுழல் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.   அதே வேளையில் தமிழகத்தில் சிவகாசி பகுதியில் வேறு எந்த தொழிலும் செய்ய இயலாத நிலையில் உள்ள மக்கள் பட்டாசு தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.  தற்போது ராஜஸ்தான் மற்றும் ஒரிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை நீக்குமாறு ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “தமிழகத்தில் பட்டாசு தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் குறைந்த அளவு சத்தம் மற்றும் மாசு உண்டாக்கும் விதமாக உள்ளன.  எனவே அதிக சத்தம் மற்றும் மாசு உண்டாகாது.

தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.  எனவே அதிக மாசு உண்டாகி கொரோனா பரவுதல் அதிகரிக்கும் என்னும் கேள்விக்கு இடமில்லை.  அத்துடன் கொரோனா நோயாளிகளைப் பட்டாசு பாதிக்கும் என எவ்வித நிரூபணமும் இல்லை.

தமிழகத்தில் சிவகாசி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பட்டாசு தொழிலில் அடங்கி உள்ளது.   இந்த தொழிலில் நேரடியாக சுமார் 4 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 4 லட்சம் பேருக்கும் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.   இதற்குத் தடை விதிப்பது இந்த எட்டு லட்சம் பேருடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடைஞ்சலை உண்டாக்கும்

உச்சநீதிமன்றம் இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் பட்டாசுகள் வெடிக்கலாம் என அனுமதித்துள்ளது.  இதை மனதில் கொண்டு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க வேண்டும்.  தமிழகத்தில் நாங்கள் தீபாவளி அன்று காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க  அனுமதி அளித்துள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.