சென்னை

சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்தனர்.   காவல்துறையினரின் கடும் சித்திரவதை காரணமாக அவர்கள் மரணம் அடைந்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதையொட்டி சிபிசிஐடி விசாரணை நடந்தது.  அந்த விசாரணையை தமிழக அரசு சிபாரிசுக்கு இணங்க சிபிஐக்கு மாற்றப்பட்டது.  தற்போது சிபிஐ குழுவினர் இந்த வழக்கு விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   இந்த தகவல் வெளியான போது பாதிக்கப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்துக்கு அரசுப் பணி அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலமைச் செயலகத்தில் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார்.  ஜெயராஜின் மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சிக்கு தமிழக முதல்வர் பணி நியமன உத்தரவை அளித்துள்ளார்.