சென்னை
இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்குத் தனது முதல் கடிதத்தை எழுதி உள்ளார்.
இன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக எளிமையாக நடந்த விழாவில் அவரும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் முதல் முறையாக பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், ”நான் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்தியதற்கு நன்றிகள். நான் தமிழகத்தின் சார்பில் உங்களுக்கு ஒத்துழைப்பை அளிப்பேன். நான் பதவி ஏற்றதும் மாநிலத்தில் உள்ள கொரோனா நிலை குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில் தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது தமிழகத்துக்கு தினசரி 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக உள்ளது. இன்னும் 2 வாரங்களில் மேலும் 400 மெட்ரிக் அதிகரித்து தினசரி 840 மெட்ரிக் டன் தேவைப்படும்.
தேசிய ஆக்சிஜன் திட்டப்படி தற்போது தமிழ்நாட்டுக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே அளிக்கப்படுகிறது. இது குறித்து எங்கள் மாநில அதிகாரிகள் மே மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதி அன்று நடத்திய பேச்சு வார்த்தையில் 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாததால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது.
நேற்று இது குறித்து மத்திய அரசுடன் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள அதிகாரிகள் ஒரு அவசர கூட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து இரு தினங்கள் முன்பு செங்கல்பட்டில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த நேரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக நீங்கள் தலையிட்டு உடனடியாக 20 கண்டெயினர்கள் ஆக்சிஜன் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.