சென்னை:
சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்.. சென்னையில் ஆங்கிலேயர்கள் இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை 382 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றுதான் வாங்கினர். அதனால்தான் சென்னைக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சீர்மிகு, சிங்கார – வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி தமது டிவிட்டர் பதிவில், சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள். சென்னை வரலாறு குறித்தும் கலாச்சார சிறப்பு குறித்தும் அழுத்தமாகப் பதிவு செய்த திரு.சு. முத்தையா அவர்கள் தான் முதன்முதலில் சென்னை தின கொண்டாட்டத்தை முன்னெடுக்கச் செய்தவர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.