சென்னை
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதனால் இவருக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை அடுத்து தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தாய்லாந்தில் கடந்த 2-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று சென்னையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது., ஏ.ஆர்.ரகுமான், அட்லி, பாலகிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிச்சா சுதீப், மணிரத்னம், ரம்யா கிருஷ்ணன், சித்தார்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரலட்சுமி – நிகோலய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முதல்வருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.