சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக சுற்றுலா  மொபைல் செயலியை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் முடக்கம் கண்ட சுற்றுலா மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது.  வரும் கோடைக்கால விடுமுறையால் மக்கள் சுற்றுலாவை ஆர்வத்துடன் செல்வார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது.  இதையொட்டி தமிழக அரசு சுற்றுலா மேம்பாட்டுத் துறை பல வசதிகளைச் செய்து வருகிறது.  மக்களுக்குச் சுற்றுலா குறித்த தகவல் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக சுற்றுலா மொபைல் செயலியைத் தொடங்கி வைத்துள்ளார்.  இந்த செயலி மூலம் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள், விழாக்கள், சுற்றுலாக் கழக விடுதிகள், படகு குழாம்கள், சுற்றுலா விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.  மேலும் சுற்றுலா முன்பதிவு செய்யவும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

இந்த செயலி “Tamilnadu Tourism” என்னும் பெயரில் ரூ.1.32 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த செயலியுடன் தமிழக பாரம்பரிய தலங்கள் குறித்த காலப்பேழை புத்தங்களும் வெளியிடப்பட்டுள்ளன.  வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு வழங்கப்படும் இந்த புத்தகங்கள் ரூ.1.27 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.37 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 60 நிமிட சுற்றுலா விளம்பர குறும் தகடுகளையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.  அத்துடன் படகு இல்லங்களுக்காக வாங்கப்பட்டுள்ள மிதி படகுகள், துடுப்புப் படகுகள், விசைப்படகுகள் போன்றவையும் சுற்றுலா வளர்ச்சி கழக பயன்பாட்டிற்காக நேற்று வழங்கப்பட்டுள்ளன.