சென்னை
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர். ஏராளமான அளவில் பயிர்கள் முழுகி பாழாகின. இதனால் பலரும் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் அளிக்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதில் மு க ஸ்டாலின், “கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசித்த 767 நபர்கள் 16 நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டது. மழையால் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் முன் கூட்டியே தங்க வைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 238 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 373 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது எனவும் முதல் நிலை அறிக்கை வரப்பெற்றுள்ளது.
இவ்வாறு பாதிப்பிற்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களை அனுப்பி வைத்தேன். அத்துடன் மின்சாரம், சாலை, உள்ளாட்சி மற்றும் இதர துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக சரி செய்யவும், இவை தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்
ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த சூழ்நிலையில், பாதிப்பிற்குள்ளான இம்மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், பகுதியாகச் சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.4100 வீதமும், முழுமையாகச் சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.5000 வீதமும் வழங்கப்படும்.
அத்துடன் மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மானாவாரி நெற்பயிர் தவிர, மற்ற மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், பல்லாண்டு காலப் பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையினை தாமதமின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.