சென்னை
தமிழக முதல்வர் தலைமையில் 22 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க உள்ளது
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. வரும் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத் துறையின் தொடர் சோதனை நடந்து வருகிறது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் இலாகாக்கள் எடுக்கப்பட்டு அவர் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார். செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது இந்திய, வெளிநாட்டுப் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியையும், அவரது மகன் கவுதம் சிகாமணி எம்.பி.யையும் விசாரித்தனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்களோ? என்ற சந்தேகம் தமிழக அரசுக்கு எழுந்துள்ளது.
மேலும் சில அமைச்சர்களும் அமலாக்கத் துறையின் சோதனை வட்டத்தில் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் 22 ஆம் தேதியன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்கும்படி அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.