சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி வேட்பாளரா? என்ற கேள்விக்கு பாஜக தலைவர் எல்.முருகன் பதில் கூற மறுத்துவிட்டார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தமிழக மாநில தலைவர் எல். முருகன் சந்தித்தார்.
மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியதாவது: கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும். ஒரு சிலரை கைது செய்துள்ளார்கள்.
முழு விசாரணை நடத்தி பின்னணியில் உள்ளவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். வேளாண் மசோதாவிற்கு ஆதரவு அளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி வேட்பாளரா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த கேள்விக்கு முருகன் பதில் கூற மறுத்துவிட்டார்.