சென்னை:

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் என்னை  விட மறுக்கிறார் என்று பாஜக பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைவர்  தமிழிசை மீது குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக பாஜகவில் பல ஆண்டுகளாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள், தற்போதைய பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர். மேலும் பல மூத்த தலைவர்களும் தமிழிசைக்காக எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். அவரை மாற்றவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், பாஜக தலைமை தமிழிசையை மாற்ற விரும்ப வில்லை. அவரே நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருவார் என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘இந்த நிலையில்,  திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.வி.சேகர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தலைவரை மாற்றினால் மட்டும் வெற்றி பெற முடியாது என்றவர், ராகுல்காந்தி தம்மீது நம்பிக்கை இல்லாததால் தான், தனது சகோதரி பிரியங்கா காந்தியை களம் இறக்கி இருப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய எஸ்வி.சேகர், தமிழக பாஜக தலைமையோ தன்னை அலுவலகத்தில் கூட விட மறுக்கிறது என்றும் தெரிவித்தார். இது பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுக்கூட்டத்திலேயே தமிழக பாஜக தலைவர்மீது நேரடியாக அவர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.