சென்னை
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.
முதல்வர் மு க ஸ்டாலின்.-
”ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தாக்குதல் நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சிலரும் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர உத்தரவிட்டேன். அதற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து, அவர்கள் பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள். இதுபோன்ற செயல்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சபாநாயகர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்’
என்று கூறினார்.
முதல்வர் உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.