சென்னை,
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கடந்த மே 23ந்தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்தது தெரிய வந்ததால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அரவக்குறிச்சி தேர்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:
வி.செந்தில்பாலாஜி (அதிமுக)
கே.சி.பழனிசாமி (திமுக)
கோ.கலையரசன் (மதிமுக)
ம.பாஸ்கரன் (பாமக)
சி.எஸ்.பிரபு (ஐஜேகே)
கு.அரவிந்த் (நாம் தமிழர்)
தஞ்சை தொகுதியில்
ரங்கசாமியும் (அ.தி.மு.க.)
டாக்டர் அஞ்சுகம் பூபதி (தி.மு.க)
மக்கள் நல கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக ஜெயபிரகாசும் போட்டியிட்டனர்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பார்வையாளர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் அந்த தொகுதியின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
மேலும், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரான சீனிவேல் உடல்நிலைக் குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கான உறுப்பினர் பதவியும் காலியாக இருந்து வந்தது.
அதன் காரணமாக காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel