சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 16ம் தேதி (நவம்பர்) வாக்காளர் வரைவுப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், அதில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி கடந்த 21ம் தேதியும், 22ம் தேதியும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அடுத்த 2 நாள் முகாம், டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்பட மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மாலை ஆலோசனை நடத்தவிருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெற உள்ள கூட்டத்தில் வாக்காளர் திருத்தம், மற்றும் சேர்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.