சென்னை
இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதால் போராட்டம் தொடர்கிறது. இந்த வேளான் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இன்று நாடெங்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்குத் தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையொட்டி இன்று காலை சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) மாநிலச்செயலாளர் என்.கே. நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதைப் போல் கிண்டியில் நடைபெறும் சாலைமறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாரன், இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். ஏழுமலை, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து திமுகவின் தொமுச பேரவை பொருளாளர் நடராஜன், “போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடைபெறும்” என்றார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் வகையில் திங்கள்கிழமை (இன்று) அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகவே வழக்கமாக இயங்கும் தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.