லிங்கப்பட்டினம்

நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே குலாப் புயல் கரையைக் கடந்துள்ளது.

நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இந்த குலாப் புயல் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதி இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலாப் புயல் கரையைக் கடந்தபோது ஆந்திராவின் கலிங்கப்பட்டியும், ஸ்ரீகாகுளம் மற்றும் வடக்குப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.  கலிங்கப்பட்டினத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 61 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து நூறு பேர் தங்க வைக்கப்பட்டதாக இணை ஆட்சியர் சுமித் குமார் தெரிவித்துள்ளார்.

தவிர ஸ்ரீகாகுளத்தில் ஆயிரத்து 400 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் நேரத்தில் கரையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து மற்றொரு மீனவரைக் காணவில்லை.  ஆந்திர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பல மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கோபால்பூர் ஒட்டிய கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து முறிந்து விழுந்தன. கஞ்சம் மாவட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 ஆயிரம் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திராவில் குலாப் புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் உட்புற பகுதிகள் வழியாக நகர்ந்து பின்னர் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் புயல் வலுவிழந்தாலும் கனமழை தொடரும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.