சென்னை
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் 23 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 230 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையப்பட்டியலில் இடம் பெற்றன. இவை அனைத்தும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டு இவை குறித்த விவரங்கள் அரசு இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த மருத்துவமனைகளில் காலியான இடம் குறித்த விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
அதாவது ஐசியு படுக்கைகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், பொது வார்டு படுக்கைகள், உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதைக் கண்டு நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லும் போது இடம் கிடைப்பதில்லை எனப் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர், தர்மபுரி, திருநெல்வேலி, கன்யாகுமரி, வேலூர், கடலூர் தஞ்சை சேலம்,திண்டுக்கல், புதுக்கோட்டை எனப் பல இடங்களில் இருந்தும் வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை நகரில் உள்ள ஒரு மருத்துவமனை உள்ளிட்ட 23 தனியார் மருத்துவமனைகள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், “பல மருத்துவமனைகளில் தனி நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் இல்லை. நோயாளிகளுக்குத் தனிமை வசதியோ போதுமான ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களும் இல்லை.
எனவே அந்த மருத்துவமனைகளில் கொரோனா அல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். ஆனால் அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி 23 மருத்துவமனைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.