கொல்கத்தா :
பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும், “ஐ-பேக்” மே.வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை செய்து வருகிறது.
“ஐ-பேக்” நிறுவனத்தின் செயல்பாடுகள் திரினாமூல் காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது எதிர்ப்பை அந்த கட்சியின் பாரக்பூர் சட்டமன்ற உறுப்பினரான ஷில்ப்தரா தத்தா என்பவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “தனியார் நிறுவன கோஷ்டியினர், திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார்கள். இதனை ஏற்க முடியாது. எனவே நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்” என்று காட்டமாக தெரிவித்தார்.
“பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்தை தானே நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்டபோது “பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. எனது முடிவை கட்சி தொண்டர்களுக்கு தெரிவித்து விட்டேன். நான் அரசியல் வாதி, கட்சி தலைமைக்குத்தான் கட்டுப்படுவேன். இது போன்ற தனியார் கோஷ்டியின் தலையீட்டை ஏற்க முடியாது” என்று அவர் பதில் அளித்தார்.
“வேறு கட்சிக்கு செல்லும் உத்தேசத்தில், உள்ளீர்களா?” என கேள்வி எழுப்பியபோது “இப்போது சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்” என பதில் அளித்தார், மம்தா கட்சியின் எம்.எல்.ஏ. தத்தா.
– பா.பாரதி