சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு உரிய இடங்கள் ஒதுக்க அதிமுக தலைமை மறுத்து வருவதால், அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக நாளை (மார்ச் 12ந்தேதி) வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, கூட்டணி, தொகுதி உடன்பாடு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக கூட்டணியில், எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க மறுத்ததால், தேமுதிக, அங்கிருந்து விலகியது. தற்போது  அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் மற்றொரு தோழமை கட்சியான ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் இருந்துவெளியேறும் சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமாகா 12  தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 6 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என கறாராக இருப்பதால், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வருகிறது. இன்று மீண்டும்  தமா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஓபிஎஸ் இபிஎஸ் உடன் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே முதல்கட்டமாக 6 பேர் கொண்ட  வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், நேற்று இரவு 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் 171 வேட்பாளர்களுடன் வெளியிடப்பட்டது.

இதனால், தமாகா தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. த.மா.காவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படாத நிலையில்,  அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து, சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, முக்குலத்தோர் புலிப்படை மட்டுமின்றி பிரதான கட்சியான தேமுதிகவும் வெளியேறி உள்ள நிலையில், ஏசி சண்முகம் கட்சி வெறுத்துப்போய், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. இந்த நிலையில், அதிமுகவின் நெருக்கடியால் நொந்துபோய் உள்ள  தமாகவும் கூட்டணியில் இருந்துரு  வெளியேற  உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால், அதிமுக தயவால்தான் ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். அதனால், அவ்வளவு எளிதாக அதிமுகவை பகைத்துக்கொள்ள மாட்டார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.