சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜி.கே.வாசன் மொத்தம் 11 இடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார். வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, நாராயண வலசு, அம்பேத்கர் நகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர், கலெக்டர் அலுவலகம் அருகில் சம்பத் நகர், பெரிய வலசு, 4 ரோடு, அப்பன்நகர், கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, பன்னீர் செல்வம் பூங்கா பகுதி, பெரியார் நகர், காந்திஜி ரோடு, காளை மாடு சிலை பகுதி, பழனியப்பா வீதி உள்ளிட்ட இடங்களில் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த தகவலை த.மா.கா. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.