சென்னை:
அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக தமகா இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா இணையும் என்று அதிமுகவில் கூறி வந்த நிலையில், தமாகா அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தது.
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு இடம்கேட்டு தமாகா வலியுறுத்தி வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வந்தது.
இதற்கிடையில், தமாகா, காங்கிரஸ் அணிக்கு வந்தால், இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப் படும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்திருந்தார்.
இது மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமாகா மூத்த தலைவர்கள் பலரும், அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து, நேற்று அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து தனது கட்சியினருடன் ஜிகே வாசன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்து இன்று அறிவிக்கப்படும் என செய்தியளார்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-த.மா.கா இடையே இன்று மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். அவர்களுடன் ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதிமுக தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெத்திடப்பட்டு உள்ளது.
கூட்டணி ஒப்பந்தத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மற்றும் ஜி.கே.வாசன் கையெழுத்திட்டனர்.