மதுரை: என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை  என்றும், என்மீது பாலியல் புகார் கொடுத்த  நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை விஜயலட்சுமி மீதான வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,   என்மீதான பாயில் வழக்கில்,   “நாம் தடை கேட்டு இருந்தோம்.  அது கிடைத்துள்ளது.  அதன் பிறகு வழக்கை முடித்து வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர்நீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். ஆனால், அதை ஏற்கவில்லை. இந்த வழக்கு  ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு என்பது, பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றுதான்இ நானே தான் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து இருந்தேன். இது தொல்லை. இதனை 15 ஆண்டுகளாக இழுப்பது நல்லதல்ல. இதனால் தான் நானே அந்த வழக்கை தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்தால் இது முழுவதும் பொய், அவதூறு, திட்டமிட்டு பரப்பப்பட்ட பழி என்பது தெரிய வந்திருக்கும். ஆனால், நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது-   இந்த இடைக்கால உத்தரவை நான் வரவேற்கிறேன். தொடர்ந்து சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம் என்று கூறியதுடன், இந்த விஷயத்தில்  உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என்றார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  என்னை விமர்சிக்க தி.மு.க., தி.க.விற்கு தகுதி இல்லை என்று காட்டமாக சாடியதுடன்,  சமீப காலத்தில்,  அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன அது குறித்து விமரிசிக்க தகுதியில்லபாதவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள்.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.

எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்? கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.அ கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனை களுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை.

திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன். இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.