tvmalai2
திருவண்ணாமலை,
திரு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.
இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
 
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம்  தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிரசித்தி பெற்ற விழாவுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். வரும் 12ந் தேதி மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 30ந் தேதி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  டிசம்பர் 1ந் தேதி ஸ்ரீபிடாரியம்மன் உற்சவமும், டிசம்பர் 2ந் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றது.
tv-malai1
தீபத்திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 3ம் தேதி இன்று காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத் துடன்  தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தங்கக் கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டபோது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து வரும் 8ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
டிசம்பர்  9ம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து . மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 – 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும். காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 12ந் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோயில் மூலவர் சந்நிதியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது
tvmala-4
டிசம்பர் 13ம் தேதி இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 14ந் தேதி இரவு ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 15ம் தேதி இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு நடைபெறும் கார்த்திகை தீபத் திருழாவில் உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 16 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[embedyt] http://www.youtube.com/watch?v=V3wtzpJN6eI[/embedyt]