திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ந்தேதி கொடியேறு கிறது. இதையொட்டி அமைச்சர்கள், அங்கு ஆய்வு செய்தனர். தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள் 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை என்பது பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தமிழர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. நெருப்புக்குரிய புனித ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இங்கு நடைபெறும் தீபத்திருவிழா உலகபிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபம் அன்று காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரையில் இந்த தீபம் ஏற்றப்படும்.
நடப்பாண்டு கார்த்திகை தீபத்திருவிழா 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ந்தேதி தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற்து. குடிநீர், கழிவறை வசதி, காவல் மையம் அமைக்கப்படும் என்றும், ஆட்டோ ஓட்டுனர்கள், நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவில் வரை பக்தர்கள் வர, 100 பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டஉள்ளது.
தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஒன்பது ரயில்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் நிலையில், மேலும் 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
12,400 கார்களை நிறுத்தும் இட வசதியுடன் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணியில் ஆயிரம் மாணவர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள்.
கோயில் பிரகாரங்களில் 169 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப்பாதையில் 9 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும்.
முக்கிய இடங்களில் 57 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
மகாதீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது, இந்த ஆண்டு 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.