திருப்பூர்: மின் தடை காரணமாக திருப்பூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் செயலிழந்தது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து ஒரு மாதமாகி வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற இருப்பதால் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக முக்கிய கல்லூரிகளில் உள்ள பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு உள்ளது. அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24மணி சிசிடிவி காமிராக்கள் வசதியுடன் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.
மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஏற்கனவே வெயில் காரணமாக சில பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் பழுதான நிலையில், தற்போது மழை மற்றும் மின்தடை காரணமாக சிசிடிவி காமிராக்கள் செயலிழந்துள்ளது.
ஏற்கனவே கோவை, நீலகிரி, ஈரோடு. விழுப்புரம், வடசென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த மையத்திலும் சிசிடிவி காமிரா செயலிழந்தது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து சிசிடிவி காமிராக்கள் செயலிழந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.