திருப்பூர் மாவட்டம், வாமனஞ்சேரி, வலுப்பூரம்மன் கோயில்

திருப்பூர் மாவட்டம் வாமனஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோயில் வலுப்பூரம்மன் கோயில். இந்தக் கோயிலில் வலுப்பூரம்மன் மூலவராக காட்சி தருகிறார். தை மாதம் தேர்த்திருவிழா உற்சவம், அமாவாசை, பௌர்ணமி, சித்திரை புத்தாண்டு, ஆடி, 18 என அம்மனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

முழுவதும் கல் வேலைப்பாடுகளுடன், கருவறை, முன், மண்டபம், மகா மண்டபம் என 3 நிலைகளில் கோயில் அமைந்துள்ளது. தூண்கள், மேற்கூரை தாங்கு தூண்களில், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகிறது. அம்மனுக்கு நேர் எதிரே பலி பீடம் அருகில், அம்மனின் வாகனமான சிங்க வாகனம் உள்ளது. முன் மண்டப வலது புறத்தில் கன்னிமார், இடது புறத்தில், விநாயகர் எழுந்தருளியுள்ளனர்.

வெளிப்பிரகாரத்தில் அம்மனின் குதிரை வாகனம், கருப்பராயன், துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ளனர். வலிப்பு நோய் குணமாக இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு வேண்டி, நோய் நிவர்த்தியானதும், உருவாரங்கள் செய்து வைத்தும், சேவல், ஆடு பலி கொடுத்தும், பறக்க விட்டும் நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு வெளியில் ஆலமரத்துக்கு அடுத்து சற்று தள்ளி தீபஸ்தம்பம் அமைந்துள்ளது. இந்த தீபஸ்தம்பத்திலிருந்து அம்மனை பார்த்தால், நேராக தெரியும் வகையில் அமைந்துள்ள அதிசயமான ஒன்று. அம்மனுக்கு எதிரே உள்ள பெரிய ஆலமரம் ஒன்றில் அம்மன் ஊஞ்சல் காணப்படுகிறது. இந்த மரத்தில் திருமண தடை நீங்க, தாலியை தொங்கவிட்டும், குழந்தை பாக்கியம் வேண்டி, தொட்டில் வளையல்கள் அணிவித்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும் பல்வேறு உருவாரங்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. கால், கை, உடல் என்று பல்வேறு வடிவங்களில் உருவாரங்கள் காணப்படுகின்றன. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டை ஆண்டு வந்த, விக்ரம சோழ மகாராஜாவின், மகள் மைக்குழலாலுக்கு, வலிப்பு நோய் ஏற்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை.

அந்த நோய் தீர பண்டிதர்களிடம் கேட்கிறார். கொங்கு மண்டலத்தில் மேலை சிதம்பரத்திற்கு சென்றால் நோய் தீரும் என்று ஆலோசனை கூறுகிறார். இதையடுத்து மகளை அழைத்துகொண்டு தனது படைகள் சூழ மன்னர் வருகிறார். அப்போது வாமனஞ்சேரியில் தங்கியிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய அம்மன் உனது மகள் நோய் தீர்க்கும் மகத்துவம் இங்கு உள்ளது. வேட்கோவரிடம் சென்று திருநீறு வாங்கிக்கொள் என்று கூறுகிறார்.

அதே போன்று இங்கு அம்மனை வழிபட்டு திருநீறு வாங்கி மகளுக்கு பூசுகிறார். மணலில் மகளை வரைந்து அம்மன் அற்புதம் நிகழ்த்துகிறாள். மகளுக்கு தீராத நோய் தீருகிறது. அதற்கு பிறகு பச்சை மண் பிடித்து, வலுப்பூரி அம்மனாக பிரதிஷ்டை செய்து மன்னர் வழிபடுகிறார். இவ்வாறு வாமனஞ்சேரியில் சுயம்புவாக எழுந்தருளி அற்புதங்களை வலுப்பூரம்மன் நிகழ்த்தி வருகிறார். மக்களின் நோய் பிணி நீக்கும் அற்புத சக்தியாக அருள்பாலித்து வருகிறார்.

அக்கி உள்ளிட்ட, பல்வேறு நோய்கள் தீர்த்து வருவதாகவும், உடல் அங்கங்கள் பிரச்சனைக்கு தீர்வு, குழந்தை பேறு, திருமண தடை நீக்கும் அம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் வலுப்பூரம்மன் நான்கு கரங்களில் ஆயுதம் ஏந்தி நோய் அரக்கனை அழித்து ஆனந்தம் அளிக்கும் சாந்த சொரூபியாக காட்சியளித்து வருகிறார். இன்றளவும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆறு வாரங்களில் நோய் நீங்கி விடுவதாக நம்பிக்கை உள்ளது.