சென்னை: ரூ.109.71 கோடி செலவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவததற்காக காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (30 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 15.8.2019 அன்று சுதந்திர தின விழா உரையில், பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 36 வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் 27,376 சதுர மீட்டர் பரப்பளவில், 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 7 தளங்களுடன் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.