திருப்பதி:

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் தரிசன டிக்கெட் போலவே போலியாக தயாரித்து விற்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பதி வெங்கடேசபெருமாள் கோயிலுக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களின் பெயர் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து அவர்களின் குடும்பத்தினர் ஐவருக்கு  ஆண்டுக்கு இரு முறை வி.ஐ.பி. தரிசனம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானம் அளிக்கும் இலவச  தரிசன வி.ஐ.பி. டிக்கெட்டை பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தாதவர்கள் குறித்த தகவல்களைத் திருடி அவர்கள் பெயரில் போலி பாஸ் புத்தகத்தை தயாரித்து விற்றுக்கொண்டிருந்தது ஒரு மோசடி கும்பல்.

திருப்பதி கோயிலில் வி.ஐ.பி.க்கள்  தரிசன டிக்கெட்டை ஊழியர்கள் பரிசோதிப்பதில்லை . ஆகவே மோசடி கும்பல் எந்தவித தடையும் இன்றி போலி டிக்கெட்டுகளை  5000 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்தது.

இதற்கிடையே,  டிக்கெட்டை ஸ்கேன் செய்யும் முறையை திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிமுகம் செய்தது.  இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி நன்கொடையாளர் வி.ஐ.பி. டிக்கெட்டுடன் 23 பேர் வந்தனர். அவர்களின் டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது பார்கோடு தவறு என காட்டியது. மேலும் ஸ்கேனும் ஆகவில்லை.

இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த 23 பேரை காவல்துறையினர் விசாரித்தபோது, தங்களுக்கு டிக்கெட் விற்ற இடைத்தரகர்களை கூறினர். அந்த இடைத்தரகர்களை காவல்துறை பிடித்து விசாரித்ததில், தேவஸ்தான கண்காணிப்பாளராக பணி புரியும் தர்மய்யா ஈடுபட்டது தெரிந்தது.

தர்மய்யா , வி.ஐ.பி. சலுகை டிக்கெட்டை ஏற்று கொள்ளாத நன்கொடையாளர்கள் விவரங்களை சேகரித்து  அந்த டிக்கெட்டுகளை  வேணுகோபால், ராஜி ஆகியோர் மூலமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் விற்றுவருவது தெரியவந்தது.

இந்த கும்பல், ஐதராபாத்தை சேர்ந்த  சாப்ட்வேர் என்ஜினீயர்கள் இருவரின் உதவியுடன் தேவஸ்தான இணைய தளத்தை ஹேக் செய்து விவரங்களை திருடியிப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஆண்டு வி.ஐ.பி. பிரேக் டிக்கெட்டில் பார் கோடு வசதியை தேவஸ்தானம் கொண்டு வந்தது. அதையும் ஹேக் செய்து போலி டிக்கெட்டுகளை தயார் செய்து விற்றிருக்கிறது இந்த கும்பல்.

டிக்கெட் ஒன்றை ரூ. 5000 ரூபாய் வரை விற்றிருக்கிறார்கள். ஆகவே இதுவரை பலகோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது இந்த மோசடி கும்பல்.

இதையடுத்து ஊழலில் தொடர்புடைய தேவஸ்தான கண்காணிப்பாளர் தர்மய்யா, வேணுகோபால், திருப்பதி வெங்கடரமணா, பார்த்தசாரதி, நாகபூ‌ஷணம், வி.ஜி. நாயுடு, கணேஷ், சீனிவாசலு, ராஜு, வெங்கடாசலபதி ஆகிய  பத்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை காவல்துறை தேடி வருகிறது.