திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி முதலீட்டின் வட்டியை எடுத்து, நிர்வாக செலவுகளை சமாளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.பக்தர்கள், 80 நாட்களுக்கு பின், சுவாமி தரிசனம் செய்ய, அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும், தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது. இதனால், உண்டியல் உள்ளிட்ட, கோவிலின் இதர வருவாய், கடுமையாக சரிந்தது.திருமலை கோவிலில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவது உள்ளிட்ட, இதர கோவில் நிர்வாக செலவுகளை சமாளிப்பதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கோவில் நிர்வாக செலவுகளை சமாளிப்பது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின், தேவஸ்தான அறக்கட்டளை வாரிய தலைவர், சுப்பா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருமலை கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, பல்வேறு வங்கிகளில், முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு முறையில் முதலீடு செய்யப்பட்டு, முதிர்ச்சி அடைந்ததும், வட்டி பெறப்பட்டு வந்தது.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, இந்த முதலீடுகளை, மாத முறைக்கு மாற்றி, ஒவ்வொரு மாதமும் வட்டி பெற்று, அதை கோவில் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.