திருமலை:
திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கியமான கருடசேவையை காண அதிகமான பக்தர்கள் திருமலை வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக மேலும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதியில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அக்டோபர் 5ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரையில் அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05601) திருத்தனி வழியாக மாலை 5 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி வரையில் மொத்தம் 8 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.
ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05602) இரவு 9.25 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் இன்றும் இயக்கப்படுகிறது.
இதேபோல், வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05604) அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இரவு 9.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு சிறப்பு ரயில் (05603) மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது (2 சர்வீஸ்) இயக்கப்படுகிறது.
இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது (6 சர்வீஸ்) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் முன்பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.