திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது.

ஒருவாரம் நடைபெற்ற பிரமோற்சவ விழா இன்று (அக்டோபர்-1)சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

விழாவில் மலையப்ப சுவாமி தினதோறும் ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பெரிய சேஷம், கல்ப விருக்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர்.

வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும் சந்தன காப்பு, மஞ்சள் காப்பு செய்து அபிசேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து  ஆயிரக்கணக்காண பக்தர்களும் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

பிரமோற்சவ விழா இன்று நிறைவு பெறுவதையடுத்து ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலின் தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இன்று மாலை இறக்கப்படுகிறது.