திருப்பதி

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில்  வழங்கப்படும் லட்டு விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட உள்ளது.

திருப்பதி கோவில் என்றாலே அனைவருக்கும் லட்டு என்பது நினைவுக்கு வருவது வழக்கமாகும்.   இந்த கோவிலில் தரிசனம் செய்யும் பெரும்பான்மையான பக்தர்கள், தர்ம தரிசனம்,  ஆதார் எண் மூலம் கிடைக்கும் சர்வ தரிசனம்,  பாத யாத்திரை மேற்கொள்வோருக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்டவைகளின் மூலம் பெருமாளைத் தரிசனம் செய்கின்றனர்.

இவர்கள் தரிசனத்துக்குக் காத்திருக்கும் போது அங்கு ரூ.70 சலுகை விலையில்  4 லட்டுக்கள் வழங்கும்டோக்கன் அளிக்கப்படுகிறது.   இவ்வாறு வழங்கப்படும் லட்டுக்கள் செய்ய ஒரு லட்டுக்கு ரூ.40 செலவாகி வருவதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சலுகை விலையில் ரூ.70க்கு நான்கு லட்டுக்கள் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது.   அதற்குப் பதிலாகத் தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்கப்பட உள்ளது.  அதற்கு மேல் லட்டு தேவைப்படுவோர் ஒரு லட்டு ரூ.50 வீதம் எவ்வளவு தேவை என்றாலும் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.